கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை



கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்த
மாணவரும், பெற்றோரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், வங்கிகளின்
வராக்கடன் உயர்வதால், புதிதாக கடன் பெறுவோருக்கு இன்னல் அதிகரிக்கிறது.

இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில,
கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை
திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற
நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால்
போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார்
வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம்
வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம்
உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக
கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள்
கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல்
அவை கல்விக்கடன் தருகின்றன.




தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767
கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது.
ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக்
கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின்,
வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி
எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார்
எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல்
ஏற்படுத்த வழிவகுக்கிறது.

சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள்
பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது.
சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று
கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு
நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது
சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின்,
அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல
கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம்.
2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை
கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில்,
50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல்
கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின்
நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள்
விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


நன்றி தினமலர்
Powered by Blogger.