ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியைப் பற்றி முதன் முதலாகப் படித்தது,  சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" என்ற புத்தகத்தில்- பதினைந்து வருடங்களுக்கு முன்னால். மனிதர் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் ந"மக்கு"ப் புரியவேண்டுமே. புரிந்து கொண்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரும்பத் திரும்ப வாசித்தபோது புரிந்தும் புரியாமலும் ஒரு அவஸ்தை.


மணிக்கு 100 கி.மீ செல்லும் டிரெயினில் கொறிக்கும் ஐட்டங்களுடன் குடும்ப சகிதமாகச் செல்கிறீர்கள். திடீரென்று குழந்தை வழக்கம்போல  "ம்ஹூம் சாக்லெட்தான் வேணும்" என்று வீட்டிலிருந்து கொண்டுவந்த பொரி உருண்டையைத் தூக்கி எறிகிறது. பொ.உ 1 கி.மீ வேகத்தில் சென்று பக்கத்தில் இருக்கும் வழுக்கைத் தலையைப் பதம் பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். குழந்தையை அதட்டுவதற்க்குமுன், பொ.உ பயணம் செய்த வேகம் என்ன? என்று கேட்டால்  மணிக்கு 1 கி.மீ என்று சொல்வீர்கள். மெத்தச் சரி. இந்தக் களேபரத்தை டிரெயினுக்கு வெளியில் இருந்து பார்த்த சிறுவனுக்குப் பொ.உ பயணம் செய்த வேகம் என்ன? மணிக்கு 101 கி.மீ. (100+1). எது சரி? 100? 101?...ஏன்? எப்படி?எதற்கு?. இரண்டும் சரிதான்.  The answer is relativity.  What they see is relative to where they are!!!

ரிலேட்டிவிட்டியின் அடிப்படை,  ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் வஸ்து இந்த உலகத்தில் - இந்த உலகத்தில் என்ன - எந்த உலகத்திலுமே (universe) இல்லை என்ற கோட்பாட்டின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது. உத்தேசமாக ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் வேகத்தில் கடந்துபோகும் ஒளியின் வேகத்தை மனிதனால் மட்டுமல்ல எதனாலும் மீறவேஏஏஏஏஏ.... முடியாது. இரவு சாப்பாடுக்குப் பிறகு திண்ணையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது தெரிகிறதே நட்சத்திரம், அதிலிருந்து வரும் ஒளி எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் தன் பிரயாணத்தை ஆரம்பித்து இன்று தான் உங்களை வந்து அடைந்திருக்கிறதென்றால் பிரபஞ்சத்தின் விசாலத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்காதீர்கள்!! அது முடியாது.

ஒளியின் வேகத்தை மீற முடிந்தால்?..அற்புதம் தான் போங்கள்!!!. தற்காலத்தில் புழக்கத்திலிருக்கும் பிரபஞ்சம் பற்றிய புரிந்து கொள்ளலையே மாற்றி எழுத வேண்டி வரும். ஒளியின் வேகத்திற்குப் பக்கத்தில் போனாலே  காலம் சுருங்கும். அதாவது அந்த வேகத்தில் பயணிப்பவரின் காலம் (Time), பூமியில் இருப்பவரின் காலத்தை விட மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். கீழ்க்கண்டவாறு சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்.
மீண்டும் ரெயில். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்யும் ஒரு ரெயில் -  ஸ்பெக்ட்ரம் அண்ட் கோ ஊழல் இல்லாமல் ஒப்பந்தம் கொடுத்து உருவாக்கப்பட்டது - சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஒரு வருடம் காலவெளியில் சுற்றிவிட்டுத் திரும்ப சென்ட்ரலில் வந்து இறங்கினால், பூமியில் வசித்த நம் உற்றார் உறவினர் சுற்றத்தார் என்போர்களை அடக்கம்  செய்த இடத்தில் முளைத்தப் புல்லைச் செத்திவிட்டு அடுத்த தலைமுறை அடக்கமும் கழிந்திருக்கும். அதே அழுக்குப் படிந்த சென்ட்ரலாக இருந்தாலும் கோணா மாணா என்று ஆடையணிந்த புதிய தலைமுறையைப் பார்க்கலாம். வேடிக்கை, இரண்டு கூட்டத்தாருக்கும் காலம் எந்த வித்தியாசமுமின்றி கடந்திருக்கும். அதாவது ரெயிலில் இருந்த நமக்கு சவரம் செய்ய ஐந்து நிமிடங்கள் தேவையானது என்றால், பூமியில் இருக்கும் மற்றவர்களுக்கும் அதே ஐந்து நிமிடம்தான். Time is relative to everyone everywhere and seems to pass at the same rate. !!!.  இவ்வளவு ஆர்ப்பாட்டமும் ஒளியின் வேகத்தின் 90% சதவீதம் பயணம் செய்ய முடிந்தால்.

ஒளியின் வேகத்தை மிஞ்சி விட்டாலோ??? "இன்று புறப்பட்டு நேற்று வந்து சேர்ந்துவிடலாம்" என்பது  சுஜாதாவின் உதாரணம். ஆம்..இன்னும் வேகம் அதிகரிக்கக் காலம் சுருங்கி, சுருங்கி கடந்த காலத்திற்குள் போய் முன்னோர்களை நலம் விசாரிக்கலாமாம்.   இதைதான் காலத்தில் பயணம் என்கிறார்கள். இதற்கான இயந்திரத்திற்குக் காலஇயந்திரம் என்று பெயர். நடக்கிற காரியமா? நடக்க வேண்டும் என்றால் ஒளியின் வேகத்தை மிஞ்ச வேண்டும். ஐன்ஸ்டீனின் இந்தத் தியரி 106 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது சென்ற மாதம் வரை.

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் – ஐரோப்பிய அணு ஆரய்ச்சி நிறுவனம் (CERN) (நாம் மேய்ந்து கொண்டிருக்கும் www வை 1989 ல் டிம்பெர்னஸ் உருவாக்கியது இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் தான் என்பது உபரித்தகவல்!!!.) ஒளியை விட வேகமாகச் செல்லும் ஒரு அணுத்துகளை (Neutrinos) கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி சிறிது வேர்த்திருக்கிறது.
மூன்று வருட காலமாக சுமார் பதினைந்தாயிரம் நியுட்ரினோ ஒளிக்கற்றைகளை ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கு அனுப்பி சோதனை செய்ததில் நியுட்ரினோக்கள் ஒளியைவிட 60 நானோ செக்கண்ட் வேகமாக வந்து சேர்ந்திருக்கிறது. ஜுஜுபி கணக்குத்தான் என்றாலும் ஒரு கோட்பாட்டை அசைத்திருக்கிறது என்பதில் அறிவியல் உலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இன்னும் இது சரியான முடிவு என்று ஏற்றுக் கொள்ளப் படவில்லையென்றாலும் ஆராய்ச்சிகள் இந்தத் திசையில் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.....காலம் தான் பதில் சொல்லவேண்டும்.!!!

அபூ பிலால்.
Powered by Blogger.