வல்லரசுக் கனவில் நம் தேசம்
ஆயினும் அதன் வளங்களெல்லாம்
மெல்ல மெல்லப் போகுது
தன்னலம் கொண்டோர் வசம்

ஜனநாயகப் பூந்தோட்டம் - ஊழல்
அனகோண்டாக்களால் அநேக நாசம்
இதுஅணியில்  இங்கு
கற்பும் கல்வியும்
ஒழுக்கமும் நீதியும்
காசுக்கு விலை பேசும்
கயமைத்தனம் கண்டோம் - இனி

ஓட்டுக்கு விலை பேசி
நாட்டுக்கு வேட்டு வைக்கும்
கேடுகெட்டத்தனமும் காண்போம்

தேர்தலில் முதலீடு
சில நூறு கோடிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டாலோ
அள்ளிச் சுருட்டுவது
பல ஆயிரம் கோடிகள்

வாக்குகள் வசம் ஆக்க
வாக்குறுதி ஏராளம்
வாரி வழங்குவார் இலவசம்
பதவி வந்தபின் இவர்களுக்கு
ஏக்கர் கணக்கில் நிலம் வசம்

தேர்தலில் கட்சிகள்
தோற்கும் ஜெயிக்கும்
எல்லாத் தேர்தலிலும்
ஜனநாயகம் மட்டும்
தோற்றுக்கொண்டேயிருக்கும்

ஊழலின் பேரால்  தேர்தலில் தோற்கும்
இன்றைய ஆட்சி
தோற்றவர் மேல் வழக்குப் போடும்
நேற்றைய ஊழல் ஆட்சி

ஜாமீனில் சறுக்கி
வாய்தாவில் வழுக்கி
வருடக்கணக்கில்
வழக்கும் சட்டமும்
ஆடும் கண்ணாமூச்சி

அப்படி இப்படி
ஐந்து வருடம் கடத்தியாச்சு
எதிர்க்கட்சி இப்போ ஆளும்
கட்சியாச்சு
சாட்சிகள் பல்டியடிக்க
வழக்கும் தள்ளுபடியாச்சு
இப்படி -
ஊழலின் வாழ்வு தன்னை
தேர்தல் கவ்வும் - ஊழலே இங்கு
மறுபடியும் வெல்லும்

ஊழல் செய்திட
ஆட்சியைப் பிடிப்பார்
ஆட்சியைப் பிடித்திட
ஊழலை எதிர்ப்பார்

புதிய ஊழலை
ஒழிக்கும்
போராட்டம்
பழைய ஊழல்
அதற்குத் தலைமை ஏற்கும்

தேவை இங்கொரு மக்கள் புரட்சி
மக்கள் இருப்பதோ - அவரவர்
மனம் கவர்ந்த
தலைவரின் கட்சி

வல்லரசுக் கனவு பலிக்க
தேவை இங்கு நல்லவை நான்கு
நல்லோர் ஆட்சி - ஒன்று
எல்லோரும் கற்றிருத்தல் - இரண்டு
இறைவனை அஞ்சி வாழ்தல் - மூன்று
இதயங்கள் இணங்கி வாழ்தல் - நான்கு

கேடு நீங்க இங்கு
மாய வேண்டும்
தீயவை நான்கு
அறிவில் மூடம் - ஒன்று
அதிக மோகம் - இரண்டு
ஒழுக்கம் துறத்தல் - மூன்று
மானுடத்தைப்
பகுத்துப் பிரித்தல் - நான்கு
நல்லோரே  இதையுணர்வீர் - பின்
நன்மையின்பால் ஒன்றிணைவீர்.
 

· கவிஞர் கே.எம். முஹம்மத்

சமரசம்  - கவிதை
Powered by Blogger.