துனிசியாவின் தேசிய மலர் மல்லிகை. துனிசிய புரட்சிக்கு 'மல்லிகை புரட்சி' என்று முதன்முதலில் தன் வலைப்பதிவில் பெயரிட்டவர்... பிரபல ஊடகவியலாளரும் ஒரு பிரபல துனிசிய பதிவருமான ஜியாத் அல் ஹானி..! இந்த புரட்சி பற்பல வருடங்களாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த நெருப்புதான்.1956-ல் பிரான்ஸ் அரசு துனிசியாவிற்கு சுதந்திரம் கொடுத்து ஆட்சியை சுதந்திரம் கேட்ட ஒரு கட்சி RCD (Constitutional Democratic Assembly) -யின் தலைவர் ஹபீப் பொற்குய்பாவிடம் ஒப்படைத்து சென்றது. இவர் அதிபரானார். 1975-ல் இந்த கட்சி அரசு இவரை 'காலமுள்ளகாலம் வரை அதிபராக' நியமித்தது. பின்னர், 1987-ல் இவர் புத்தி சுவாதீனமற்று போய்விட்டதால், அப்போதைய பிரதமர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அதிபரானார். முதலில் எதிர்க்கட்சி என்றபெயரில் உள்ள அனைவரையும் 'அப்புறப்படுத்தினார்'. அப்போது நன்கு வளர்ந்திருந்த பிரதான எதிர்க்கட்சியான 'நஹ்டா' என்ற இஸ்லாமிய கட்சிதான் அரசின் முக்கிய அழித்தொழிப்பு இலக்கு. அதன் தலைவர் ரஷித் கொன்னோச்சி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். (23 ஆண்டுகள் கழித்து முந்தாநாள்தான் நாடு திரும்பியுள்ளார்)