1.டிசம்பர், 1949
பாபர் மஸ்ஜித் என்பது ‘ராம ஜென்ம பூமி’ என்று இந்துக்கள் உரிமை கொண்டாடியதை எதிர்த்து நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இது சர்ச்சைக்குரிய இடம்’ என்று அறிவித்து பாபரி மஸ்ஜிதை இழுத்துப்பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது.
2.அக்டோபர், 1984
ராம ஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி வி.ஹெச.பி.யின் ஊர்வலம் நடத்தினர். அப்போது ‘ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என்று எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்று துவங்கப்பட்டது.
3. பிப்ரவரி, 1986
பைசாபாத் நீதிமன்றம், பாபா மஸ்ஜிதை இந்துக்களுக்கு மட்டும் திறந்துவிடுமாறு உத்தரவிடுகிறது. ஆட்சேபனை செய்த முஸ்லிம்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்.
4. ஜனவரி, 1987
டி.வி. தொடர் ராமாயணம் இந்தியா முழுவதும் தூரதர்ஷன் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இது மக்களிடையே ராமன் மீது அதிகப்படியான பக்தியை உண்டாக்கியது. இது ராமர் இயக்கத்திற்கு மேலும் வலுவைத் தந்தது.
5. செப்டம்பர், 1989
வி.ஹெச்.பி.யினர் நாடு முழுவதும் ‘ராமர் சிலா பூஜையை நடத்தி, ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் ஆதரவை - முக்கியமாக இந்துக்கள் ஆதரவைத் தேடுகிறது.
6. நவம்பர், 1989
லோக் சபா தேர்தல் நெருங்கி வரும் சமயம். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் சங்பரிவார்கள் சிலா நியாஸ் பூஜையை நடத்த அனுமதிக்கிறார். (காங்கிரஸின் மிருதுவான இந்துத்துவா கொள்கை அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பிக்கிறது).
7. நவம்பர், 1990
அத்வானி தனது பிரசித்தி பெற்ற ரத யாத்திரையைத் துவங்குகிறார். சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கிச் சென்று வழிநெடுகிலும் இந்துக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிடுகிறார். ஆனால், பிஹாருக்குள் நுழைந்தவுடன் சமஸ்திபூரில் கைது செய்யப்படுகிறார். அதே மாதம் கரசேவகர்கள் பாப்ரி மஸ்ஜிதுனுள் நுழைந்து அதன் ஒரு பகுதியை சேதப்படுத்தினார்கள். இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் பாப்ரி மஸ்ஜிதைக் கைப்பற்றுவதை பாதுகாவலர்கள் தடுத்து விடுகிறார்கள்.
8. நவம்பர், 1990
பி.ஜே.பி. மத்திய அரசுக்கு வழங்கி வந்த தனது ஆதரவைத் திரும்பப் பெற்றதால் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழ்கிறது.
9. டிசம்பர், 6, 1992
கரசேவகர்களால் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உத்தரவு ஏதும் கொடுக்கப்படாததால், அயோதிக்கு வெளியே படை நிற்கிறது. அத்வானி, உமாபாதி, கோவிந்தாச்சார்யா, முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய தலைவர்கள் அங்கு கூடி நின்றனர். தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் மூண்டது. பல காவித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்திரபிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு கலைக்கப்படுகிறது. அப்போது பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ்).
10. டிசம்பர், 1992
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு லிபரான் கமிஷனை அமைத்து பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிடுகிறது.
1998- 2004 ஐந்தாண்டுகள் பா.ஜ.க மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறி வாக்குகள் பெற்றனர். ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோயில் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்துவிட்டதால் அவர்களுக்கு கையிலெடுக்க வேறு பிரச்சினைகளும் கிடைக்கவில்லை.
11. செப்டம்பர், 2007
மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஐ.ஐ. கூட்டணி அரசைத் தாக்கவும், மக்களை தம் வசம் இழுக்கவும் ராமர் சேது பிரச்சினையை சங் பரிவார் கையிலெடுத்துள்ளது. மீண்டும் இந்துத்துவா சக்தியை ஒன்றிணைக்க ஒரு துருப்புச் சீட்டாக ராமர் சேதுவை சங்பரிவார்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நன்றி : சமநிலைச் சமுதாயம் நவம்பர் 2007