திருடச் சொல்லும் அரசை திருத்துவோம் வாருங்கள்…
எதிர்ப்புக் குரல் எழுப்பக் கூட திராணியற்ற நடுத்தர மக்களின் மீதும். . . வயிற்றுடன் போராடுவதே வாழ்க்கை என்று இருக்கிற வறியவர்கள் மீதும். . . அரசு நடத்துகி அசுரத் தாக்குதல்தான் இந்த பஸ் கட்டண உயர்வு.
சராசரியாக 70 முதல் 80 சதம் வரை கட்டணத்தை உயரத்தியுள்ளது அரசு? இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? இக்கட்டணத்தை எதிர்கொள்ள, அரசு மற்றும் தனியார் நிறுன ஊழியர்களின் ஊதியத்தில் ஏதாவது உயர்வு உண்டா? இவர்களின் நிலையே இதுவென்றால் . . . தினக் கூலி தொழிலாளர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?
இதுவரை சராசரி வருமானத்தில் 1000 ரூபாயை போக்குவரத்துக்காக செலவிட்டவர்கள், இனி 2000 ரூபாயை செலவிட வேண்டும். எதைக் கொண்டு இந்த அடிப்படியான செலவை ஈடுகட்டப் போகிறோம்? கூடுதல் வருவாய்க்கு வழி சொல்லாமல் சுமையை மட்டும் கூட்டினால், இதை எப்படி சமாளிப்பதாம்?
நம்மை திருடச் சொல்கிறாத இந்த அரசு?
லஞ்சம் வாங்க நிர்பந்திக்கிறதா?
இல்லை அரசியல்வாதிகளைப் போல முறைகேடுகளில் ஈடுபட சொல்கிறதா? ஒரு வேளை கூடுதலாய் உழைத்து வருவாயைப் பெருக்கச் சொல்கிறதா?
ஏற்கனவே இருக்கும் நேரம் முழுக்க, உழைக்கச் செலவிட்டு இயந்திரத்திலும் கேவலமான வாழ்க்கையைத்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனி மிச்சமிருப்பது உறங்கும் நேரம்தானே? அதையும் இழக்கச் சொல்கிறதா இந்த அரசு?
அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குகிறதென்றால், அதே கட்டணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் மட்டும் எப்படி லாபத்தில் இயங்குகின்றன?
ஒரு வேளை அரசு கூறும் காரணங்கள் நியாயமாகவே இருந்து விட்டுப் போகட்டும், நாம் எங்கிருந்து இந்த பணத்தை சம்பாதிப்பது?
நிர்வாக சீர்படுத்துதலின் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட முடியாதா?
அரசாங்கத்தாலே இழப்பை ஈடுகட்ட முடியவில்லை என்றால், சாதாரண, சராசரி வாழ்க்கை வாழும் மக்கள், தங்கள் இழப்பை எப்படி ஈடுகட்டுவது?
குறைந்தபட்சம் 50 சதவிதம் முதல் அதிகபட்சமாக 100 சதவிதத்துக்கும் மேல் ஒரே நேரத்தில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம்தான் என்ன? இதைக் கேட்டால் கைவசம் பதிலைத் தயாராக வைத்திருக்கின்றனர். ‘நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழி தெரியவில்லை; ‘கடந்த அரசு செய்த தவறு’. இப்படியாக நீள்கிறது இவர்களின் பதில்கள்.
நம்பும்படியாகவா இருக்கிறது இந்த பதில்கள்?
ஓட்டுப் போட்டவர்களில் பெரும்பான்மையோர் ஓட்டாண்டிகள் என்பது தெரிந்தும், அடுத்த வேளை உணவுக்கும் கூட அரசின் ரேசன் கடைகளை நம்பியிருப்பவர்கள் என்று தெரிந்தும் இந்த விலை உயர்வு தேவையா? “
நஷ்டத்தை சரி செய்ய வேறு வழிதான் என்ன? இந்த ஒற்றைக் கேள்வி, கட்டண உயர்வு என்கிற காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தாது.
நம்மிடமும் கூடத்தான் கேள்விகள் உண்டு.
பொதுச் சேவைக்கு வந்த நீங்கள் எல்லாம் சேனல்களின் அதிபதிகள் ஆனது எப்படி? என்பதில் துவங்கி, சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் இல்லாத அரசியல்வாதி யார் என்பது வரை நம்மிடமும் கேள்விகள் இருக்கலாம். ஆனால் பதில் சொல்லும் இடத்தில் அவர்கள் இல்லை.
இனி நாம் என்ன செய்யலாம்?
இந்த கட்டண < உயர்வுக்கு நாமும் கூட ஒரு வகையில் காரணம்தான்.
நீங்களும் நானும் நிச்சயமாய் எதிர்த்துப் போராட மாட்டோம் என்பதால்தான் அரசு இப்படி செய்கிறது. மிஞ்சிப் போனால், போக்குவரத்தே இல்லாத இடத்தில் ஒரு போராட்டம்; அதிகபட்சம் ஒரு ஆர்பாட்டம். இதைத் தவிர இவர்களால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியம் காட்டுகிறது அரசு? இவ்வளவுதானா நாம்?
இப்போது சொல்லுங்கள் இனி என்ன செய்யலாம்?
...
......
.............
........................