http://news.vikatan.com/index.php?nid=5538
 (2011-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிறகு, 'Alfred Nobel's Legacy to Women'  என்கிற தலைப்பில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃப், சமீபத்தில் நிகழ்த்திய ஆங்கில உரையின் மொழியாக்கம் இது.)

டிசம்பர் 10-ம் தேதி ஆஸ்லோவில் இருந்தேன். என்னுடன் ஆப்பிரிக்காவில் இருந்து லேமா போவீ மற்றும் தவாக்குல் கர்மான் ஆகிய இரண்டு சகோதரிகளும் உடனிருந்தனர். நாங்கள் மூவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெறச் சென்றிருந்தோம். நோபல் பரிசுக் குழுவின் வார்த்தைகளிலே சொல்வதானால், "பெண்களின் பாதுகாப்புக்காக அகிம்சை வழியில் நடத்திய போராட்டத்திற்காகவும் அமைதியைக் கட்டமைக்கும் பங்களிப்பில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டியதற்காகவும்" எங்களுக்கு அமைதிக்கான பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.


இன்று டிசம்பர் 13. ஆப்பிரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி பாரிஸ் நகரில் பேசப் போகிறேன். கூடவே, லைபீரியாவுக்கு நான் எடுத்துச் செல்லவிருக்கிற இந்தப் பரிசை உருவாக்கிச் சென்ற ஆல்ஃபிரட் நோபல் அவர்களுக்கு என் மரியாதைகளையும் செலுத்தப் போகிறேன்.

1895 நவம்பர் மாதம் இதே பாரிஸ் நகரில், தனக்குச் செல்வத்தை அள்ளித் தந்த டைனமைட் என்ற ஒன்றைக் கண்டடைந்த இந்த ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் 'நான் சம்பாதித்த அனைத்தும் என் பெயர் தாங்கிய பரிசுகளை ஏற்படுத்துவதற்காக விட்டுச் செல்கிறேன்' என்று தன் இறுதி ஆசையை எழுதிவிட்டுச் சென்றார்.

ஒரு தவறான புரிந்துகொள்ளலால்தான் நோபல் இப்படியான முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாள் நிறுவனம் நோபல் இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டது. 'மரணத்தின் வியாபாரி மரணமடைந்தார்' என்பதுதான் அந்தச் செய்தியின் தலைப்பாக இருந்தது. மேலும், 'டாக்டர் ஆல்ஃபிரட் நோபல், மக்களை வேகமாகக் கொன்றழிக்கும் வழிவகை ஒன்றைக் கண்டுபிடித்து அதன் மூலம் செல்வந்தர் ஆனார்' என்றும் குறிப்பிட்டிருந்தது அந்தச் செய்திக் கட்டுரை.

அந்த செய்தித்தாள் இரண்டு வகையில் தவறு செய்தது. முதலாவது, இறந்தது ஆல்ஃபிரட் நோபல் அல்ல. அவரின் சகோதரர். இரண்டாவது, குறிப்பாக ஆல்ஃபிரட் நோபல் கண்டுபிடித்த டைனமைட் மக்களைக் கொல்லவில்லை. மக்கள் தான் மக்களைக் கொல்கிறார்கள். அது கத்தியாலோ அல்லது துப்பாக்கியாலோ அல்லது நோபல் கண்டுபிடித்த டைனமைட் ரசாயனத் துகள்களால் செய்யப்பட்ட வெடிகுண்டாலோ நிகழ்த்தப்பட்ட கொலைகளாகவே அவை இருக்கின்றன.

கடந்த கோடைகாலத்தில் நார்வேயில் 77 அப்பாவி மக்களை ஒரு தனி மனிதன் வெடிகுண்டுகள் வைத்துக் கொன்ற சம்பவம் மேற்சொன்ன கருத்தைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நல்ல வளமும், நிரம்ப அமைதியும் கொண்டிருக்கின்ற அந்த ஸ்கேன்டினேவியன் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரிதானதாக இருக்கும் என்று டிசம்பர் 10-ம் தேதி ஆஸ்லோவில் இருந்த போது நான் உணர்ந்திருந்தேன். ஆனால் அப்படியான சம்பவங்கள் உலகின் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது, அதிலும் குறிப்பாக என்னுடைய கண்டத்தில். அதிலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, சியர்ரா லியோன், சூடான், சோமாலியா மற்றும் என்னுடைய நாடு லைபீரியா ஆகியவற்றை மட்டும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன்.

மேலும், யுத்தங்களில் கொடுமையான குற்றங்கள் பலவும் வெடிமருந்துகள் இல்லாமல் தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், எந்த ஓர் ஆயுதமும் தேவைப்படவில்லை. மிகச் சிறிய அளவிலான முரட்டுத்தனம் போதுமானதாக இருந்திருக்கிறது.

கற்பழிப்பு என்பது பரிசோதிக்கப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை அதிகம் உடைய யுத்த ஆயுதமாக இருந்து வந்திருக்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தச் சமயத்தில் நான் இதைச் சொல்கிறேன். கூடவே, நான் ஆஸ்லோவில் சொன்ன ஒரு சொலவடையை இங்கே மீண்டும் சொல்கிறேன்:

"சர்வதேசியத் தீர்ப்பாயங்கள், யுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கற்பழிப்பு... மானுடத்துக்கு இழைக்கப்படும் குற்றமாகப் பிரகடனப்படுத்திய பிறகும், சட்டம் சீர்குலைந்திருக்கும் நேரங்களில் இந்தக் குற்றம் முழுமூச்சாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்கா நம் சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது எல்லா வயதிலும் கடந்த இருபது ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு வந்திருப்பதை நினைத்தால் நம்மை நிலைகுலைய வைக்கிறது. அது போன்ற கொடுமைகளால் பல மக்களின் வாழ்வு நாசமாக்கப்பட்டிருப்பதையும் நம்மால் மறுக்க இயலாது.

நம் உடல்களைச் சிதைப்பதன் மூலமும் நம் லட்சியங்களை அழிப்பதன் மூலமும், பெண்களும் பெண் குழந்தைகளும் எந்தப் பாரபட்சமும் இல்லாது குடும்பத்திலும், சர்வதேச அளவிலும் தங்கள் மீது நடைபெறும் ஆயுதத் தாக்குதலுக்கு விலை பேசப்பட்டிருக்கிறார்கள். குருதியாகவும், கண்ணீராகவும், மான்பை இழந்ததாகவும் அந்த விலைக்கு உரிய தொகை நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது".

ஆனாலும் எங்கெல்லாம் மனித உடலுக்கும் மனத்துக்கும் எதிராக இந்த இரட்டை அத்துமீறல்களை நிகழ்த்தும் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தங்களின் வாழ்க்கையை அமைதிக்காக அர்ப்பணித்துக் கொண்ட ஆண்கள், உண்மையில், அதிக அளவிலான பெண்கள் இருக்கிறார்கள். இந்த மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டாடவும் முக்கியமாக, அவர்களை மாதிரிகளாகக் நிறுவவுமே ஆல்ஃபிரட் நோபல் விரும்பினார்.

தன் பரிசுகளுக்கு நிதி வழங்க ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையின் ஏற்பாட்டின் படி, ஒவ்வொரு வருடமும் "நாடுகளுக்கிடையே சகோதரத் தன்மை நிலவச் செய்யவும், இருக்கின்ற இராணுவப் படைகளைக் குறைக்கவும் மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் அமைதியைப் பரப்பவும் எவர் ஒருவர் அதிகமாகவும், சிறந்த முறையிலும்  பாடுபடுகிறாரோ," அவருக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்.

1899-ல் நடந்த ஹேக் அமைதி மாநாட்டை மேம்படுத்தியதற்காக, பாரன்னஸ் பெர்தா ஃபெலிசி சோஃபி வான் சட்னர் என்பவருக்கு 1905-ல், இந்தப் பரிசு வழங்கப்பட்டது. அப்போதிருந்து "நீடித்த நிலைத்த வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதி'க்காக உழைத்ததற்கு 2004-ல் நோபல் அங்கீகாரத்தைப் பெற்று சமீபத்தில் மறைந்த வாங்கரி மத்தாய் வரை 11 பெண்கள் இந்த வரிசையில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

கென்யப் பேராசிரியரான வாங்கரி மத்தாய் மிகச் சிறிய வயதிலேயே இறந்துவிட்டார். நோபல் குழு பெருமைப்படுத்திய முதல் ஆப்பிரிக்கப் பெண் இவர்தான். அவருக்குப் பிறகு அவரின் பாதையை ஒற்றி அவரது சகோதரிகள் மூன்று பேர் இன்று அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதன் மூலம் அவர் இருமடங்கு பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

பேராசிரியை மத்தாயின் நினைவுகளைப் போற்றும் வகையில் மட்டும் இல்லாமல், அதனுடன் கூடவே யுத்த பாதிப்புகளைத் தடுக்கவோ அல்லது அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவோ ஆப்பிரிக்காவிலும், உலகம் முழுவதிலும், தன்னலம் கருதாமல் இடையறாது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும் நாம் போற்ற வேண்டும்.

ஆஸ்லோவில் நான் சொன்னது போல, லேமா போவீ, தவாக்குல் கர்மான் மற்றும் நானும் இந்த உலகத்தில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர்களின் பெருமைக்குரிய பிரதிநிதிகளாகத்தான் இந்தப் பரிசை பெற்றுக் கொண்டோம். அவர்களின் பிரதிபலிப்புதான் நாங்கள்.

ஆஸ்லோவில் நான் சொன்ன இன்னொரு சொற்றொடரையும் இங்கே மீண்டும் சொல்கிறேன்:

"இப்படி ஒரு பெருமைக்குப் பிறகு அதனுடன் மிகப் பெரிய பொறுப்பும் வருகிறது. இந்த நிமிடத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை வைத்து அல்ல... மாறாக, நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வைத்தே வரலாறு நம்மை மதிப்பிடும். நமக்குப் பின் வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் ராஜபாட்டையை வைத்துத்தான் வரலாறு நம்மை தீர்மானிக்கும்."

பாரீஸில் அந்த மனிதன் விட்டுச் சென்ற ராஜபாட்டையை இன்று நான் போற்றுவதைப் போல!

தமிழில்: ந.வினோத்குமார்
Powered by Blogger.