விவரங்களை பதிவுசெய்யும் பணி துவங்கியது..
தினமலர் – செ, 2012 ஜன. 3
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை, பதிவு செய்யும் பணி நேற்று துவங்கியது.நடப்பாண்டில் "ஸ்மார்ட் கார்டு' முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்ததால், நடப்பாண்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் 2011ம் ஆண்டு டிச., மாதத்துக்குப் பின் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது; ரேஷன் கார்டுகளில் ஆண்டு குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட உள்தாளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து தற்போது பயன்பாட்டில் உள்ள கார்டுகளில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் "2012' என்ற முத்திரையிட்டு பயன்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கார்டுகளில்
குடும்பத்தினர் குறித்த பெயர் விவரங்களில் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், குடும்ப நபர் எண்ணிக்கையில் சேர்த்தல் அல்லது குறைத்தல் ஆகியன செய்ய வேண்டியிருந்தது. இதற்காக அரசு
தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த விவரங்களை கார்டை பயன்
படுத்தும் குடும்ப தலைவர் அல்லது ஒரு உறுப்பினர் நேரில் சென்று விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்; விவரங்கள் பதிவு செய்யும் முறை குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த வாரம்
வட்ட வழங்கல் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
கார்டில் மாற்றம் செய்யப்படும் விவரங்கள் உரிய பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். பதியப்பட்ட விவரத்தை கார்டுதாரரிடம் காட்டி, கையொப்பம் பெற வேண்டும். பதிவு செய்த கார்டுகள் எண்ணிக்கை மற்றும் விவரம் தினமும் வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணி குறித்த விவரம் ரேஷன் கடையில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இந்த பணி வரும் பிப்., மாத இறுதி வரை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 2.3 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு துறை, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியன மூலம் செயல்படும் 255 கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடைகளில் நேற்று பொருட்கள் வாங்க வந்த கார்டு
களில் விவரம் பதிவு செய்து, புதுப்பிக்கும் பணி துவங்கியது; வட்ட வழங்கல்
அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள்
பார்வையிட்டனர்.
பதிவேடு இல்லாமல் அவதி: ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் 2012ம் ஆண்டுக்கான வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்து, அந்த கார்டுதாரரிடம் கையொப்பம் பெற ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணி நேற்று துவங்கி, பிப்., மாதம் இறுதி வரை இரு மாதங்களுக்கு நடக்கிறது. பணி துவங்கிய முதல் நாளான நேற்று 2012ம் ஆண்டுக்கான வழங்கல் பதிவேடு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வந்து சேரவில்லை.
புதிய பதிவேடு கிடைத்த கடைகளில் மட்டும் பதிவு செய்யப்பட்டன. பதிவேடு வராத இடங்களில் மாற்று ஏற்பாடாக சாதாரண நோட்டுப் புத்தகத்தில் விவரம் பதியப்பட்டன.