mouna-guru-2 சமீபகாலமாய் பார்த்த திரைப்படங்களில் தமிழுணர்வோ, அல்லது வன்முறை உணர்வோ ஏதோ ஒரு உணர்வு இருந்தாலேயன்றி தமிழ் சினிமா இல்லை என்றிருந்த நேரத்தில் வந்த வித்யாசமான படம் தான். குத்துப்பாட்டு இல்லை, அச்சுபிச்சு காதல் இல்லை, எட்டு அடிக்கு பறந்து பறந்து அடிக்கவில்லை. இப்படி வழக்கமாய் தமிழ் சினிமாவில் இருக்கும் பல விஷயங்கள் இல்லாத ஒரு படம்.

மூன்று கரப்டட் போலீஸ்காரர்களால் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் இளைஞனின் கதை.  அவன் அந்த ப்ரச்சனையிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை கொஞ்சம் கூட சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் ஒரு ஸ்லீக்கான ஆக்‌ஷன் த்ரில்லரை தந்திருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய படங்களில் எப்படியோ அருள்நிதிக்கு இந்த கேரக்டர் சரியாய் பொருந்தியிருக்கிறது. படம் முழுவதும் டைட்டிலுக்கு ஏற்றார்ப் போல மெளனகுருவாகவே வருகிறார்.  அதிகம் பேசாமல் நம் பக்கத்துவீட்டு பையன் போலிருக்கிறார். அண்ணன் வீட்டில் தன்னை அவாய்ட் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டு வெளியேறும் போதும், டெலிபோன் கடையில் இரண்டு ரூபாய்க்காக சண்டை போடும் போதும், என்ன ஏது என்று கேட்காமல் அடித்த போலீஸ்காரரை அடித்துவிட்டு அவரின் குழந்தையை ஸ்டேஷனில் கொண்டு வந்து சேர்க்கும் இடம். போலீஸ்காரர்களின் சதியால் மனநிலை பிழன்றவர் என்று காப்பகத்தில் கையாலாகாமல் மாட்டிக் கொண்டு மெளனம் காக்கும் போதும், வேறு வழியேயில்லை எனும் போது சாதாரணன் கூட எதிர்த்து போராடுவான் என்பது போல போராடும் இடமாகட்டும் அருள்நிதி பேசாமலேயே மனதில் நிற்கிறார். என்ன அவர் வாய் திறந்து பேசினால் கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிகிறது. அது அவர் பேசும் சில வசனங்களுக்கு பொருந்த மாட்டேன் என்கிறது. மற்றபடி இந்த படம் அருள்நிதிக்கு சொல்லிக் கொள்ளும் படமே.
mouna-guru-4 வாகை சூடவாவிற்கு பிறகு இனியா நடித்து வரும் படம். சின்னச் சின்ன ரியாக்‌ஷனில் மனதில் நிற்கிறார். அருள்நிதியை காதலிப்பதை தவிர பெரிதாய் ஏதும் செய்ய ஸ்கோப் இல்லாத கேரக்டர். ஆனால் அது தான் கதையின் கட்டாயமும் கூட என்பதால் பெரிதாய் நெருடவில்லை. மொட்டை மாடி காட்சிகளில் அவர் முகத்தில் மிக இயல்பாய் தெரியும் அந்த வெட்கம் கலந்த க்யூட்டான பார்வைகள். அஹா..

கரப்டட் போலீஸ் உதவி கமிஷனராக ஜான் விஜய்.அருமையாய் செய்திருக்கிறார்.பாடிலேங்குவேஜிலாகட்டும், டயலாக் டெலிவரியிலாகட்டும் மனிதர் கலக்கியிருக்கிறார். அவருடன் வரும் மற்ற இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பர்பாமென்ஸில் கலக்கியிருக்கிறார்கள். இவருக்கு பிறகு முக்கியமாய் பாராட்டப்பட வேண்டிய ஒரு பர்பாமென்ஸ் உமா ரியாஸினுடயது. காலேஜ் பாதர், அதன் வாட்ச்மேன், காலேஜில் வில்லத்தனம் செய்யும் அந்த மாணவன், ஹாஸ்டல் வார்டன் என்று சின்னக்கேரக்டர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
mouna-guru-8 மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆரம்பக் காட்சியில் வேனில் ஹீரோவுடன் அறிமுகமாகும் காட்சியில் ரோட்டின் வெளிச்சம் வரும் போது மட்டுமே ஒவ்வொரு கேரக்டராய் ப்ரேமில் கொண்டு வரும் இடம் குறிப்பிடத்தக்கது. படம் நெடுக உறுத்தாத இயல்பான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். இசை தமன். பாடல்கள் என்று பார்த்தால் இரண்டு பாட்டுக்கள் தான் வருகிறது என்று நினைக்கிறேன். அவைகள் ஏதும் குறிப்பிடத்தக்கதாய் இல்லாவிட்டாலும், பின்னணியிசையில் மனிதர் நிரம்ப உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் ஆர்கெஸ்ட்ரேஷன் அருமை. க்ளைமாக்ஸில் வசனமேயில்லாமல் வரும் சண்டைக் காட்சியும், அதன் பிறகு வரும் காட்சிகள் தமன் பேர் சொல்லும்.
எழுதி இயக்கியவர் சாந்தகுமார். தரணியின் உதவியாளர். தன் முதல் படத்திலேயே தன்னை நிருபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல் படத்திலேயே ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுப்பது, அதுவும் முழுக்க,முழுக்க திரைக்கதையை மட்டுமே நம்பி ஆரம்பிப்பது தன் ஸ்கிரிப்ட்டில் நல்ல நம்பிக்கையிருந்தால் மட்டுமே முடியும். அதற்காக இவரின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அருள்நிதியின் கேரக்டரை பற்றி அறிமுகப்படுத்துவதில் ஆரம்பித்து, கதையின் முக்கிய கேரக்டர்கள் இன்வால்வ் ஆகும் அந்த விபத்து, மற்றும் பணம் கொள்ளையை ஹீரோவின் கதையோடு இணைத்து, அதன் பிறகு நடக்கும் அத்துனை காட்சிகளிலும் யதார்த்தமான ட்விஸ்டுகளை வைத்து பண்ணியிருப்பது பாராட்டுக்குரியது.  முக்கியமாய் உமாரியாஸின் கர்பவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.படு யதார்த்தம். அவர் இன்வெஸ்டிகேட் செய்யும் விதமும், அதை காட்சிப்படுத்திய அழகும் வாவ்.. தமிழ் சினிமாதான் பார்க்கிறோமா? என்று ஆச்சர்யப்படுத்துகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு காரண காரியம் வைத்திருப்பதும், விபச்சாரி, பாதரின் பையன், கல்லூரி ரவுடி மாணவன் ஆகிய கேரக்டர்களுக்கான ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் என்று நிறையவே உழைத்திருக்கிறார். காட்சிகளை நகர்த்தும் விதமும், போலீஸ் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான இரண்டு எக்ஸ்ட்ரீம் கேரக்டர்களான ஜான் விஜய், உமா ரியாஸ்  மூலம் அழகாக உணர்த்தியிருக்கிறார்.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முக்கியமானது படத்தின் நீளமும், க்ளைமாக்சும்தான். முடிந்த வரை யதார்த்தை சினிமாவாக்கி, ஹீரோயிசமில்லாத படமாய் எடுக்க முயற்சித்திருந்தாலும், நிஜ வாழ்கையில் நடக்கும் அதே மெத்தனம் படத்திலும் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பதை எடிட்டுட்டு, நீளம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் குறையில்லை. பரபரப்பான ஃப்ரீ க்ளைமாக்ஸுக்கு பின் வரும் க்ளைமாக்ஸ் ஒரு மாற்றுக் குறைவுதான். இம்மாதிரியான படங்களுக்கு வெளியின் வரும்போது கதாநாயகனின் ப்ரச்சனையோடு உழன்ற நமக்கு அதிலிருந்து அவன் விடுபடும் போது கிடைக்கும் ரிலீப்பை உணர்ந்தால் அது பெரிய இம்பாக்டாக இருந்திருக்கும். மிக இயல்பான க்ளைமாக்ஸால் அது கொஞ்சம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எது எப்படியிருந்தாலும் மொத்தத்தில் நல்ல ஆக்‌ஷன் திரில்லரை கொடுத்ததிற்காக சாந்தகுமாரை பாராட்ட வேண்டும்.
மெளனகுரு – அழுத்தம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Powered by Blogger.