ஏம்பல் தஜம்முல் முஹம்மது
எப்பொருளும் அழிந்துபடும் என்றென்றும் அழியாத
மெய்ப்பொருளாய் இறைஇருப்பான் மேதினியீர் அறிவீரே!....2
 
அழிந்துபடும் பொருளெதற்கும் அடிபணிந்தே அழியாதீர்
அழியாத வாழ்வுபெற அல்லாஹ்வைத் தொழுவீரே!.................3
 
மிகுந்திருக்கும் படைப்புகளில் மேலான படைப்பாகப்
பகுத்தறிவைப் படைத்தானே பலஞானம் உடையோனே!........4
 
பகுத்தறிவு உடையவரே படைத்தவனைப் பணிவீரே
தகுதிஇலாப் பிறபடைப்பு தமைவணங்கித் தாழாதீர்!.................5
 
மனத்தூய்மை கொள்வீரே மக்கள்பணி செய்வீரே
இனநேசம் கொள்வீரே இறைநேசம் பெறுவீரே!..........................6
 
என்றென்றும் வாழ்வோமென்(று) இம்மைக்குப் பணிபுரிக
இன்றைக்கே மாள்வமென மறுமைக்கே அமல்புரிக!..................7
 
அமல்ஒன்றின் நற்கூலி, ஆடவரே பெண்டிர்களே
சமமாகும் இறையவனின் சந்நிதியின் முன்னிலையில்!...........8
 
பெண்ணெனினும் ஆணெனினும் பேணுகின்ற கற்பொழுக்கம்
மன்பதையில் பொதுவாகும் மறையோனின் விதியாகும்...........9
 
படைப்பனைத்தும் நமக்காகப் படைத்தளித்த வல்லோன்போல்
கொடையாளன் யருமில்லை, கொள்க இதைக் கருத்தினிலே..10
 
இம்மையிலே யாவருக்கும் மறுமையில்தன் அடியார்க்கும்
நன்மைசெயும் நாயகனை நன்றியுடன் துதிப்பீரே........................11
 
யார்மனிதன் அறிவீரா? யாவற்றிலும் மேலான
பேர்இறைவன் பிரதிநிதி! பெருமைஇதை உணர்வீரே.................12
 
ஒருதந்தை ஒருதாயால் உண்டான மக்களிடைப்
பிரிவுசெயும் பேதங்களேன்? பிணக்கின்றி இணங்கிடுக!..............13
 
சிந்தனையில் மேலான செல்வமிலை உலகினிலே!
எந்நாட்டில் இருந்தாலும் இல்முதனைப் பெறுவீரே!....................14
 
அறிஞர்தம் பேனாவில் இருந்துவரும் மைத்துளிகள்
நெறிகாக்கச் சிந்துகிற இரத்தத்தில் மேலாகும்!..............................15
 
ஊர்திருத்த வருபவர்தம் உள்ளத்தை, இல்லத்தைச்
சீர்திருத்தி வருகவென செயலாலே சொன்னாரே!.........................16
 
சாந்திபெற வாரீரே! சன்மார்க்கம் சேர்வீரே
மாந்தர்களே தவறிவிட்டால் மறுமையிலே சோர்வீரே!...............17
 
மறுஉலக வாழ்வினைநீர் மனமாரப் பெறவிழைந்தால்
இருஉலக வாழ்வுகளும் இயல்பாகச் சிறந்திடுமே!........................18
 
ஓட்டினிலே ஒன்றாமல் உள்ளிருக்கும் புளியம்பழம்
காட்டுகிற தன்மையுடன் காசினியில் வாழியவே!.........................19
 
பயமில்லை! பயமில்லை!! படைத்தவனைப் பயந்திருந்தால்
ஜெயமுண்டு! ஜெயமுண்டு! சீலமுடன் வாழ்ந்திருந்தால்!...........20
 
இறைவிருப்பை முன்னிறுத்தித் தன்விருப்பைப் பின்னிறுத்தி
மறைவழியில் வாழுவதே மகத்தான வாழ்வாகும்!.”.......................21
 
                                   ----ஏம்பல் தஜம்முல் முஹம்மது
Powered by Blogger.