இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
-அ.மார்க்ஸ்
{கேள்வி பதில் வடிவிலான இந்நூல் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதுவரை அய்ந்துக்கும் மேற்பட்டபதிப்புகள் வந்துள்ளன. முஸ்லிம்கள் குறித்துப் பொதுப்புத்தியில் பதிககப்பட்டுள்ள பல பொய்மைகளைத் தோலுரிக்கும் இந்நூல் முழுமையாக இங்கே தரப்படுகிறது.}
ஒன்று : வரலாற்றில் வகுப்பு வாதம்
1. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?
வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள். ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? “ஆரியர் வருகை” எனச் சொல்லும் நம் பாடநூல்கள் “இஸ்லாமியர் படை எடுப்பு” எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான்.
யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது சனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம். இங்கே சொல்லப்பட்டவற்றை ஆதாரங்களுடன் மறுத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.