ஆடை.!
நாங்க எப்படி வேண்டும் என்றாலும் உடை அணிவோம்.
அது எங்க உரிமை என்று மார்தட்டுகிறார்கள் பெண்ணுரிமை மாணிக்கங்கள்.!
கலையை கலையாக பார்க்க வேண்டும். ஆபாசமாக உடை அணிவதை தவறாக பார்ப்பது கொடூர மனப்பாங்கு என்கிறார் மற்றொருவர்.
ஆடை குறித்து பேசுவது எல்லாம் காட்டுமிராண்டித்தனம்/ பழமைவாதம் என ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள் பகுத்தறிவு சிங்கங்கள்.!
அய்யா.! நீங்களாகவே ஒன்றை அரை குறையாக புரிந்து கொண்டால், எல்லாவற்றையும் உங்கள் முன் முடிவின் அடிப்படையில் முடிவு செய்து வெறுத்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது.
*******************
வெறும் ஒழுங்கான ஆடை மட்டுமே , பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து விடாது. அப்படி எவரும் சொல்லவும் முடியாது.
ஆனால், நிச்சயம் குற்றங்களை குறைக்கும்.
ஆடை பெண்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறதோ, இல்லையோ, நிச்சயம் அவர் மீது வீசப்படும் காமப் பார்வையின் அளவைக் குறைக்கும்.
பாதுகாப்பு என்பது சுமை அல்ல. அவசியம்.!
கலையைக் கலையாக பாருங்க என்கிறார்கள் சிலர்.
எல்லா பெண்ணுரிமை வாதிகளும் பல்கிக் கிடக்கும், நிர்வாணத்தைக் கூட கலையாக நினைக்கத் தேர்ந்து, ஆராதிக்க தெரிந்த மேலை நாடுகளில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
*******************
அது தான் சட்டங்கள் இருக்கிறதே.! பின் எதற்கு தனி மனிதனுக்கு கட்டுப்பாடுகள் என கேட்கிறார்கள் சிலர்.
வெறும் சட்டங்கள் மட்டுமே நம் பாதுக்காப்பை உறுதி செய்து விடாது.
உதாரணத்திற்கு.!
போக்குவரத்து விதிகள் இருக்கிறது.
எல்லோரும் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்துத்தான் வண்டி ஓட்ட வேண்டும் என்கிற சட்டமும் இருக்கிறது.
அதற்காக நாம் கண்ணை மூடிக் கொண்டு வண்டி ஓட்ட முடியுமா?
நம்மை மற்றவர்கள் இடித்து விட மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில், நாம் வண்டி ஓட்டுவோமா?
நம் பாதுகாப்பை நாம் தான் அக்கறை எடுத்து பேண வேண்டும்.
விபத்து நிகந்த பின் கதறி பலன் இல்லை.
*******************
எந்த ஒரு மனிதர் மீதும் நடத்தப்படும் எந்த ஒரு குற்றத்தையும், எந்த ஒரு காரணம் கூறியும் நியாயப்படுத்த முடியாது. குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும்.
ஆனால் நாம் பாதிக்கப்பட்ட பின், நம்மை பாதித்த குற்றவாளிக்கு நாம் வாங்கிக் கொடுக்கும் தண்டனை,
அந்த குற்றவாளியின் குற்ற செயல்பாடுகளில் இருந்து பிற மனிதர்களை காப்பாற்ற உதவலாம்.
ஆனால், நாம் பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்டது தான்.!
சற்று முன் ஜாக்கிரதையாக இருந்திருந்தால் நாமும் நம்மை காத்திருக்கலாம் தானே.!
*******************
பெண்களை முழுக்க முக்காடு போட்டு பொத்தி வீட்டுக்குள் முடக்கி வைக்க வேண்டும் என சொல்லவில்லை.
அப்படி நீங்களாகவே நினைத்துக் கொண்டால் அது உங்க தவறு.
ஆனால், ஏன் மற்ற ஆண்களின் சபலங்களை தூண்டும் விதமாக சமூக அமைப்பை ஊக்குவிக்கிறீர்கள்.
ஏன் பெண்களையும் ஆண்களின் காமப்பார்வைக்கு தீனியாக்குகிறீர்கள் என்பதே இங்கு கேள்வி.
*******************
இறை அச்சம் - சமூக பொறுப்புணர்வு போன்றவையே தவறு இழைக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதில் இருந்து மீள தனி மனிதனுக்கு வழி வகை செய்யும்.
நல்லா மனசுல கையை வச்சு சொல்லுங்க.!
ஆடை என்கிற நிலையில் உங்கள் பெண்ணையும், ஒரு அந்நிய பெண்ணையும் உங்களால ஒரே மன நிலையில் பார்க்க முடியுமா.?
ஆடையின் ஒழுங்கு கலைந்துள்ள உங்கள் சொந்த மகளையும், அதே வயதுள்ள அறிமுகம் இல்லாத ஒரு இளம் பெண்ணையும் உங்களால் ஒரே மனநிலையில் பார்க்க முடியுமா.?
ஆம். எப்போதும் நான் அப்படித்தான் பார்க்கிறேன் என்கிறீர்கள் என்றால். இதற்கு மேல் நீங்கள் படிக்க வேண்டாம்.
வாதத்தில் வெல்ல நீங்கள் எதையும் சொல்வீர்கள்.
இல்லை. ஆடை கலைந்துள்ள பெண் சொந்த மகளென்றால், சுய கட்டுப்பாடு மற்றும் பாசத்தின் காரணமாக இச்சைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளி, அறிவுறுத்தல்களை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவோம்.
அதே, வேறு ஒரு பெண் என்கிற போது நம்முடைய மன இச்சை நம்மை கண்டிப்பாக அலைக்கழிக்கும்.
நம்மில் அந்த வேளையில் நிறைந்துள்ள நற்பண்பு அல்லது தீய பண்பின் அடிப்படையில் நம் செயல்பாடு அப்போது அமையும்.
அது வெறும் விலகலாக இருக்கலாமா. அல்லது கிடைக்கும் வரை பார்ப்போம் என்பதாக இருக்கலாம். அல்லது அந்த இடத்தை விட்டே நாம் நகர்ந்து விடலாம்.. அல்லது வேறு எதோ ஒன்று நிகழும்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், சுற்றுபிற சூழலைப் பொறுத்தும் ஒவ்வொரு தனி மனிதனது செயல்பாடும் அமையும் அல்லது மாறும்.
மாற்றுக் கருத்து உண்டோ.?
நாம் எல்லோரும் மனிதர்களே.!
மனிதனுடைய இயல்பு / இச்சைகள் நம் எல்லோரிடத்திலும் கண்டிப்பாக இருக்கும். அது கட்டுப்படுத்துவோர் எல்லா சூழலிலும் ஒரே போலத்தான் இருப்பார் என்று சொல்ல இயலாது.
இறை அச்சம் - சமூக பொறுப்புணர்வு போன்றவையே தவறு இழைக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதில் இருந்து மீள தனி மனிதனுக்கு வழி வகை செய்யும்.
போயா வெங்காயம்/ப.... என்று திட்டினால் நம் எல்லோருக்கும் கோபம் வரும்.
இல்லை அப்படித் திட்டினால் எனக்கு கோபம் வராது என நீங்கள் சொன்னால், உங்களை என்ன சொன்னால் கோபம் வருமோ அப்படி சொன்னால் கண்டிப்பாக கோபம் உங்களுக்கு வரும்.
அப்படியும் வரவில்லை என்றால், நீங்கள் மட சாம்பிராணி என்று அர்த்தம்/ சுய அறிவு அற்றவர் என்று பொருள் . (இப்பவாவது கண்டிப்பாக கோபம் வருமே.!)
*******************
நாம் வீட்டை பூட்டி வைத்தால் மட்டும் நம் வீட்டை திருட்டில் இருந்து பாதுகாத்து விட முடியுமா.?
முடியாது.
ஆனால், அதற்கென்ன என்று வீட்டை திறந்து வைத்துக் கொண்டு செல்பவனை நாம் என்னவென்று கூறுவோம்.??
பின் அப்படிப்பட்டவன், தன வீட்டுப் பொருட்களை திருட்டில் பறி கொடுத்து கதறினால் அவனுக்காக நாம் இரக்கப்படுவோமா?
மாட்டோம்.!
சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்களே என்று கூட ஒரு வாய்மொழி உண்டு.
அந்த சந்தர்ப்பத்தை நாமே அமைத்துக் கொடுக்கும் போது, அதை பயன்படுத்திக் கொண்டு,ஈவ் டீசிங் முதல் அப்போதைக்கு எது முடியுமோ அது வரையிலான குற்றம் இழைப்பவன் குற்றவாளி.!
பாதிக்கப்படும் நாம்.?
வெறும் ஏமாளி அல்ல.!! இல்லை.!
வாய்ப்பு இருந்தும், முன் பாதுகாப்பை மேற்கொள்ளாத அடி முட்டாள்.!
*******************
நம் பள்ளிக் குழந்தைகள் அணியும் உடைகள் பல சரியில்லை.!
நம் சினிமா இளம் வயதினரிடையே பரப்பி வரும் பல விஷயங்கள் சரியில்லை.
இன்னும், இன்னும் பல..
எல்லாவற்றையும் திறந்து போட்டு கொண்டு போ, அது உன் உரிமை/நாகரிகம் என்கிற ரீதியில் பெண்களிடம் விஷம் பரப்பும் சினிமா..
கிடைத்ததை அனுபவி, எஞ்ஜாய் என்று ஆண்களிடம் அதே விஷத்தை மாற்று வழியில் பரப்புகிறது.
ஏதாவது பண்ணுங்க.!
கட்டுப்படுத்தப்படாத காம உணர்வும் போதை பழக்கம் போலத்தான்.!
பரவும் போது, அனுமதித்து விட்டு, முற்றிய பின், நிறுத்த முயல்வது சற்றே சிரமம்.!
விளைவு இன்று நாடறியும்.!
நமறியோமோ.?/