முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம்
- கான் பாகவி
கடந்த 21.10.2011 அன்று லிபியா அதிபர் முஅம்மர் கதாஃபி சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி கல் நெஞ்சையும் கரைத்துவிடும். உயிருக்குப் பயந்து ராட்சச நீர் குழாய்க்குள் ஒளிந்துகொண்டிருந்த கதாஃபியை, நேட்டோ படைகளும் லிபிய புரட்சிப் படைகளும் சேர்ந்து வெளியே இழுத்துப் போட்டுக் குண்டுகளுக்கு இரையாக்கியதை அல்ஜஸீரா தொலைக்காட்சியின் இணையதள ஒளிபரப்பில் கண்டபோது நாமும் துடித்துப்போனோம் என்பது உண்மைதான்.
கடந்த 42 ஆண்டுகாலமாக எதிர்ப்பே இல்லாமல், அல்லது எதிர்ப்பு இருந்தாலும் அதை எளிதாக முறியடித்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிந்தார் கதாஃபி. ‘ஐக்கிய ஆப்ரிக்காவின் சிற்பி’ என அவருடைய ஆதரவாளர்களால் புகழ்ந்துரைக்கப்படும் கதாஃபியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி.
கதாஃபி தன்னை எப்போதும் ‘ஏழைகளின் பங்காளி’ என்று வர்ணித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைவார். சாதாரண நிலையிலிருந்து பெரிய பதவிக்கு வந்த அவர், ‘ஆப்பிரிக்க அரபி முஸ்லிம்’என்று வெளி உலகுக்கு அறிமுகமானவர். ஆப்ரிக்கர் என்பது உண்மை; அரபியர் என்பதும் உண்மை. அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் சர்ச்சைக்குரியது என்கிறது குவைத் இஸ்லாமிய வார இதழ்‘அல்முஜ்தமா’.
வாழ்க்கைக் குறிப்பு
1942ஆம் ஆண்டு வட ஆப்ரிக்கா நாடான லிபியாவில் ‘சரத்’ மாவட்டத்தில் ஜஹ்னம் எனும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முஅம்மர் கதாஃபி பிறந்தார். லிபிய ராணுவத்தில் இடைநிலை ஆசிரியராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கினார்.
தமது 27ஆவது வயதில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கதாஃபி தனிப்பட்ட முறையில் திறமைசாலிதான் என்பதில் ஐயமில்லை. ஐக்கிய ஆப்பிரிக்காவை உருவாக்குவதுதான் அவரது முதல் கனவுத் திட்டமாக இருந்தது. இதையடுத்து எகிப்து, சூடான்,லிபியா, சிரியா ஆகிய நாடுகளை ஆப்பிரிக்கக் கூட்டணியில் கதாஃபி இணைத்தார்.
எகிப்து முன்னாள் அதிபர் கமால் அப்துந் நாசிரின் ஆசி கதாஃபிக்குக் கிடைத்தது. நாசர் இறந்தபிறகு அவருடைய வாரிசாக இருந்து அல்ஜீரியா, துனூசியா, மெராக்கோ ஆகிய நாடுகளையும் இக்ககூட்டணியில் இணைத்தார்.
லிபியா நாட்டின் அரசியல் சாசனம் என்று சொல்லி, அவரே தயாரித்ததுதான் ‘பச்சைப் புத்தகம்’ [Green Book] எனும் ஒரு நூல். இதில் தமது நாட்டுக்கு ஒரு நீண்ட பெயரைச் சூட்டினார். ‘மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசு’ என்பதே அப்பெயர்.
ஜனநாயகத்தின் எதிரி
மூச்சுக்கு மூச்சு மக்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய கதாஃபி பேசினாரே தவிர, செயலில் ஜனநாயகத்தின் விரோதியாகவே விளங்கினார்.
கதாஃபி தமது ஆட்சியில் புரிந்த குற்றங்களின் பட்டியல் நீளமானது. 1978ஆம் ஆண்டு இமாம் மூசா ஸத்ர் அவர்களைக் கொலை செய்தார். சாட் நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1984ல் லண்டனில் லிபியா தூதரகத்தில் பணியாற்றிய பிரிட்டன் பெண்மணியைக் கொன்றார்.
1992ல் லிபிய விமானத்தில் குண்டுவைத்து 150 லிபியர்களைக் கொன்றார். 1996ல் தலைநகர் திரிபோலியில் உள்ள பூசலீம் சிறையில் 1170 கைதிகளைக் கொன்றார். 2003ல் சஊதி அரபியா மன்னர் அப்துல்லாஹ்வைக் கொல்ல முயன்றார்.
இக்வானுல் முஸ்லிமீன் நண்பர்கள் மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பளித்தார். இக்வான்களைச் சிறையிலடைத்துக் கொடுமைகள் புரிந்தார்... இப்படி நீள்கிறது கதாஃபியின் ஜனநாயகப் படுகொலைகள் பட்டியல்.
குர்ஆனின் எதிரி
எல்லாவற்றுக்கும் மேலாக, முஅம்மர் ஒரு நல்ல முஸ்லிமே அல்ல. தாம் எழுதிய பச்சைப் புத்தகத்தை‘நவீன பைபிள்’ என வர்ணித்த அவர், இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் மனம்போன போக்கில் கிறுக்கிவைத்துள்ளார் என்பதுதான் பெரிய கொடுமை.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம், மற்ற எல்லாச் சட்டங்களையும்போல மாற்றத்திற்குரியதுதான்; இறுதி த் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு ‘தபால்காரர்’ [Postman] என் பதற்கு மேலாக வேறொன்றுமில்லை. நபியவர்களின் பரப்புரை எல்லாம் அரபுகளுக்கு மட்டுமே உரியவை.
திருக்குர்ஆனில் எங்கெல்லாம் ‘குல்’ (நபியே, கூறுவீராக) என்று வருகிறதோ அங்கெல்லாம் அச்சொல்லை அகற்றிவிட வேண்டும். நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட இதுபோன்ற சொற்கள், நபியவர்களின் மறைவுக்குப் பிறகு அவசியமற்றவை -இதுவெல்லாம் கதாஃபியின் உளறல்களில் அடங்கும்.
இஸ்லாத்தின் எதிரி
உங்களைப் போன்று நான் வெளிப்படையாகத் தொழுகையை நிறைவேற்றமாட்டேன் என்று சொன்ன கதாஃபி, முழங்கால்களை இதைவிட அதிகமாகத் தாழ்த்தக் கூடாது என்று மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள் என்றார்.
அஸ்ர் தொழுகையை மாற்ற வேண்டும்; மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளில் சப்தமிட்டு குர்ஆன் ஓதமாட்டேன். உங்களுடன் அதிக நேரம் பேசுவதால், அத்தொழுகைகளில் குரலெழுப்பி என்னால் ஓத முடியாது.
பகல் முழுக்க நோன்பு நோற்பது பேரிழப்பாகும். அது ஒரு வேதனை. இதில் சந்தேகமே இல்லை. நோன்பு சுகமான ஒன்று என யார் கூறுவார்? நோன்பு நோற்க வேண்டிய தேவை என்ன? சிரமமான,பிடிக்காத ஒரு தேவையே நோன்பு.
புனித கஅபா ஆலயம் இறுதிக் காலம்வரை இருக்கும் கடைசி விக்கிரகம். கஅபாவையும் ஸஃபா - மர்வாவையும் சுற்றிவருவதும் அரஃபாத் மலைமீது ஏறுவதும் சாதாரணமான ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான்! இதுபோன்ற வழிபாடுகளையெல்லாம் அல்லாஹ் விரும்புவதில்லை.
ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு நீங்கள் கல் எறிகிறீர்கள். முறைப்படி பார்த்தால் பாலஸ்தீனில் யூதர்களை நோக்கியே கல் எறிய வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் ஏழு கற்களை எடுத்துக்கொண்டு,பாலஸ்தீனம் செல்வதுதான் உண்மையான அறப்போர்; கல்லெறிதல். ஒரு சிலைமீது கல் எறிவதால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? (பிற்காலத்தில் இஸ்ரேலின் நண்பராக கதாஃபி மாறியது தனிக் கதை.)
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எந்தப் புனிதத்துவமும் கிடையாது. பெண்கள் ஹிஜாப் (பர்தா) அணிவது கடமையல்ல; முதல் பெண்மணி ஹவ்வாவை எப்படிப் படைத்தான் இறைவன்? அவரிடம் என்ன ஆடை இருந்தது? இதுதான் இயற்கை. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் படைத்தான். ஷைத்தானால்தான் மனிதன் ஆடை அணிந்தான். ஹிஜாபே ஷைத்தானால் வந்ததுதான்.
பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவே இல்லை. இரண்டு அல்லது நான்கு திருமணம் செய்துகொள்வது குர்ஆனில் இல்லவே இல்லை.
இப்படி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக ஏராளமான புரட்டுகளை எழுதியவரும் பிரசாரம் செய்தவரும்தான் கதாஃபி.
நபிமார்களையும் தோழர்களையும் திட்டியவர்
நபி யஅகூப் (அலை) அவர்கள் குறித்து கதாஃபி எழுதும்போது, ‘‘அவரும் அவர் குடும்பத்தாரும் மிகவும் மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று அபாண்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபித்தோழர்கள், குறிப்பாக நேர்வழி கலீஃபாக்களை ஏசுகின்ற கதாஃபி, நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வந்த கலீஃபாக்களைவிட்டு விலகியவர்கள் என்று புளுகுகிறார். அலீ (ரலி) அவர்கள்,இறைத்தூதரின் கலீஃபா என்றால், அவரது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பாதிப்பேர் அவரை ஏன் எதிர்த்தனர்? அவருக்குப்பின் அவருடைய மக்களை ஏன் கொன்றனர்?
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி புரியவே தகுதியில்லாதவர்; அவர் அரிஸ்டாட்டில் கொள்கையைப் பின்பற்றியவர்; உறவினர்களுக்கு ப் பொறுப்புகளைக் கொடுத்து இடைத்தரகர்களை உருவாக்கினார். இறுதியில் அவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று கடுமையாக விமர்சிக்கிறார் கதாஃபி.
‘மிஅராஜ்’ என்று ஒன்று நடக்கவே இல்லை; இதுவெல்லாம் கற்பனை; குர்ஆனில் இதற்கு இடமில்லை. குறிப்பாக, ‘புராக்’ என்பது சுத்தப் பொய்; அப்படி ஒன்று இல்லவே இல்லை. மிஅராஜ் நடந்திருந்தால், ‘அப்பெயர்’ நிச்சயம் குர்ஆனில் இடம்பெற்றிருக்கும்.
ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ் |
இக்வானுல் முஸ்லிமீன் பெரியவர்களை ‘மதம் மாறியவர்கள்;பேன் பிடித்த தாடிக்காரர்கள் என்றெல்லாம் கதாஃபி ஏசுகிறார்.
மேற்சொன்ன வரிகள் கதாஃபியின் பச்சைப் புத்தகத்திலும் அவருடைய உரைகளிலும் வெளிப்பட்ட, இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துகளாகும்.
கதாஃபியின் இத்தகு கருத்துகள் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் முன்பே தீர்ப்பளித்துள்ளார்கள். சஊதி உலமாக்கள் அமைப்பும் கதாஃபியைக் கண்டித்துள்ளது.
உலக இஸ்லாமிய மையம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) 27ஆண்டுகளுக்கு முன்பே கதாஃபிக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டது. ‘கதாஃபியின் அவதூறுகளும் தக்க பதில்களும்’என்பது நூலின் பெயர். ‘‘முஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை,சட்டம், வாழ் க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்பதே நூலின் முதல் பக்க வாசகமாகும்.
இஸ்ரேலின் நண்பர்
ஹிஜ்ரீ காலண்டரை நீக்கிவிட்டு, லிபியாவுக்கென புதியதொரு காலண்டரை கதாஃபி உருவாக்கினார். அது நபி (ஸல்) அவர்களின் இறப்பிலிருந்து தொடங்குகிறது. பெண்கள் இல்லங்களில்தான் இருக்க வேண்டும் என்று பச்சைப் புத்தகத்தில் எழுதிவிட்டு, ஆண்களைவிடப் பெண்களையே எப்போதும் தம்முடன் வைத்திருப்பார் கதாஃபி. கடந்த ஆண்டு இத்தாலி சென்றிருந்தபோது அழகிகளுடன் தங்கிய அவர், அழகிகளுக்கு இஸ்லாமியப் பிரசாரம் செய்கிறேன் என்றார்.
எகிப்தின் ஹசனீ முபாரக்கைப் போன்றே லிபியாவின் முஅம்மர் கதாஃபியும் இஸ்ரேலின் இனிய நண்பர்களில் ஒருவராவார். இதனால்தான் இஸ்ரேலையும் ஃபாலஸ்தீனையும் இணைத்து ‘இஸ்ராதீனம்’ எனும் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று கதாஃபி கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 42 ஆண்டுகளாக கதாஃபியின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துப் பொறுத்து பொறுமை இழந்துவிட்ட லிபிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கதாஃபிக்கெதிராகப் போர் முரசு கொட்டத் தொடங்கி, இறுதியாகச் சுட்டுக்கொன்றுவிட்டனர். அல்லாஹ்வே மிகப் பெரியவன்.