நம்முடைய தேசம் பன்முக கலாச்சாரத்தைக் கொண்ட சிறந்த ஒரு தேசம்.

தொடர்படியான மத மோதல்கள், கொலைகள், தாக்குதல்கள், வன்முறைகள் என தேசம் கடந்து வந்த இருண்ட பக்கங்கள் சிலவற்றின் வரலாற்று சுவடுகளை நாம் அறிவோம்.

இதற்கான காரணகர்த்தாக்கள் யார்.? பலியாடுகள் யார் என்பதயும் நாம் நன்கறிவோம்.!

இந்த நாட்டில் வாழும் நல்ல உள்ளம் உண்ட சமூக நல்லிணக்கவாதிகள், சமூகப் போராளிகள், நல்ல தலைவர்கள், பொதுமக்களின் தொடர்படியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக நம்முடைய தேசம்
பல இனம், மத, மொழியுடன் கலந்து,
பன்மைச் சமூகக் கலாச்சாரத்தைக் கொண்டு வீறு நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதோ இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வர இருக்கிறது.
சில மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.
அடி வயிற்றில் சற்றே பயம் புரட்டுகிறது.

வன்முறை, மதவாத , கலவர அரசியல் நடத்தியே பழக்கப்பட்டு இருக்கிற சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு பொதுமக்களும், இளைய சமுதாயமும் பலியாகி விடக்கூடாது என்கிற உணர்வு மனதில் ஆர்ப்பரிக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக மக்களை
மத, மொழி, இன ரீதியாக பிரித்து, வன்முறைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி,
அதன் மூலம் சுய லாபத்தை அடைய;
வோட்டுக்களைப் பெற
நம் நாட்டில் கட்சிகள் சில தயாராக உள்ளன.

தேசத்தில் எதோ ஒரு மூலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உடனடியாக மீடியாவும், அரசும் தரும் செய்திகளை அப்படியே நம்பி விடாமல், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சற்றே நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறில்லையேல் அவசரத்தின் காரணமாக ஊகங்களையும், வீண் புரளிகளையும் பரப்பி அதன் மூலம்,
நாமே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து விட நேரிடலாம்.

தேவை அதிக எச்சரிக்கை.!

ஏன் இவை நடக்கிறது.,?
இவற்றை எப்படி அணுகுவது.?
இதன் மூலம் பலனடையப் போவது யார் என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்தால்,
நம்முடைய செயல்பாடுகளை நாம் சற்றே விவேகத்தோடு அமைத்துக் கொள்வோம்.

அவ்வாறில்லாமல் வெறும் வெற்று கோபத்தோடும், ஆவேசத்தோடும் மட்டுமே நம் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டோமென்றால் நமக்கு நாமே கேட்டையும், இழிவையும் தேடிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டு விடும்.
எந்த ஒரு சமூகமும் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளாவிடில் ,
தவறுகள் திரும்ப நடப்பதை எவராலும் தடுக்க முடியாது.
இறைவன் நம்மை பாதுகாப்பானாக.!

நம்முடைய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புவோர்
அதற்கான வாய்ப்பு கிடைக்காதா என காத்துக் கொண்டு இருக்கும் வேளையில்;
வேண்டும் என்றே சில விரும்பத்தகாத நிகழ்வுகளை அரங்கேற்றும் வேளையில்;
நம்முடைய இளைஞர்கள் சிலரும் அறியாமை மற்றும் ஆவேசத்தின் காரணமாக அந்த சதிக்கு பலியாகி விடுகின்றனர்.

நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நாம் செய்யும் நடவடிக்கைகள்,
பொது மக்களுக்கு தொல்லைகளை உண்டாக்கும் வகையிலோ,
பொதுமக்களுக்கு நம் மீது வெறுப்பை அதிகரிக்கும் வகையிலோ அமைந்து விடக்கூடாது.
மாறாக நம்முடைய நியாயமான போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவையும் பெரும் வகையில் நம் அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எதிர் நடவடிக்கைகள், போராட்டங்கள் போன்றவையெல்லாம் கூடாது என்பதல்ல.
மாறாக அவை நமக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் அமைந்திட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் நமக்கெதிரான வெறுப்புணர்வை , நம்முடைய செயல்கள் மூலமாக, நாமே அதிகரித்தால் அது அறிவாளித்தனமா.?

நமக்கெதிராக யாரோ சிலர் பின்னும் சதி வலையின் சிக்கல்களை,
நாமே அதிகப்படுத்தி விடக்கூடாது.

நமக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டி நாம் வன்முறையையோ, சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறையையோ கையில் எடுத்து விடக்கூடாது.

நமது எந்த ஒரு செயலும் வீண் பதட்டத்தையும், அச்சமான சூழலையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

அதனால் எவ்வளவு பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பொது அமைதி பாதிக்கப்படும். மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
பதட்டம் நிலவும்.

எவ்வளவோ நபர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும், பயணங்களும் மருத்துவ சூழலும் கேள்விக்குரியதாக ஆகி விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் உயிர்கள் கூட பலியாகி விட நேரிடலாம்.
சொத்துக்கள் நஷ்டப்படலாம்.

நீதிக்காக எங்கு யாரை , எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுக வேண்டும்.
நியாயம் வேண்டி நாம் மேற்கொள்ளும் நம்முடைய போராட்டங்களை சட்டத்தின் துணை கொண்டு வீரியம் மிக்கதாக ஆக்க வேண்டும்.

பொதுவாக தேர்தல் சமீபத்தில் அணுகி வரும் காலங்களில்,
இது போன்ற பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் வோட்டுகளை பெறுவது என்பது சில அரசியல் கட்சிகளின் தேசிய கொள்கையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட பதட்டமான சூழல்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தான் அவர்கள் தேசிய அளவில் வளர்ச்சி பெற்றார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே.

எனவே மீண்டும் அப்படிப்பட்ட சூழ்நிலைக்காக வேண்டி அவர்கள் காத்து இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
நம் நடவடிக்கைகள், எதிர் நடவடிக்கைகள், போராட்டங்கள் போன்றவற்றில் இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது.!

ஒரு இறை நம்பிக்கையாளன் ஒரே புற்றில் இருந்து இரண்டு முறை குட்டுப்பட(தீண்டப்பட) மாட்டான் அல்லவா. ?

ஆண்டாண்டு காலமாக சுய லாப அரசியலுக்காக சிலர் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சியை நன்கு உணர்ந்து கொண்டு,
அப்படிப்பட்ட சதிச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு வேரோடு களை எடுப்போம்.

அப்படிப்பட்ட சூழ்ச்சிகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கிகளை மேற்கொண்டு சதிகளை முறியடிப்போம்.

சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் நாட்டில் செழித்து ஓங்கட்டும்.

எங்கள் இறைவா எங்கள் தேசத்தை அமைதியும் நீதியும் மிக்கதாக ஆகித்தருவாயாக.!
நல்ல ஆட்சியாளர்களை எங்களுக்கு ஏற்படுத்தி தருவாயாக.!

நாட்டில் எல்லா தரப்பு மக்களும் அவர்களுக்குரிய நீதி, நியாயம் மற்றும் அடிப்படை உரிமைகை பெற்று வாழ அருள் புரிவாயாக.

நல்லோர்களின் இதயங்களை ஒண்றிணைப்பாயாக.!
தீயோர்களின் சதிகளை முறியடிப்பாயாக.!
 
Powered by Blogger.